Tuesday, December 04, 2007

Star6a. மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! ((மீள்பதிவு)

திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து 'சாரதி செஸ் கிளப்' என்ற அமைப்பை நடத்தி வந்தனர். ஒருவர் அக்கிளப்பில் உறுப்பினராக ஆவது சற்று கடினமே! கிளப்பின் மூத்த உறுப்பினர்கள், சேர விரும்புபவரின் செஸ் அறிவை சோதித்துப் பார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அவர் உறுப்பினராக முடியும். சாரதி செஸ் கிளப் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும் வழங்கி வந்தது. அந்த கிளப்பில் உறுப்பினர் ஆனதில் அப்போது எனக்கு ரொம்பப் பெருமை.

சாரதி செஸ் கிளப்பில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்கள், அதன் தலைவரான, 'சார்' என்றழைக்கப்பட்ட, எம்.காம். படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன், கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த வேணு (அதிபுத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்'வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள். அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடைபெற்றது!

அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, மிக லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடிக்கார இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வச்சுட்டு வாங்க. இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம்" என்று வேணுவை சுட்டிக் காட்டி கூறினார். வேணு, "சார், நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறார். ஒரு வாய்ப்பு தரலாமே" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவைச் சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது.

வேணு எங்களிடம் செய்வது போலவே, தனக்கு வெள்ளைக் காய்கள் என்று தானே நிர்ணயித்துக் கொண்டு, காய்களை செஸ் போர்டில் வரிசைப்படுத்தினார். இந்த மட்டும் ஆட வாய்ப்பு தந்தார்களே என்று
தாடிக்காரரும், அதற்கு ஆட்சேபிக்காமல், கறுப்புக் காய்களைஏற்றுக் கொண்டார்! வேணுவின் முதல் நகர்த்தல் P-K4. தாடியும் P-K4! அடுத்து, வேணுவின் P-KB4 என்ற மூவ், 'King's Gambit'க்கு தாடிக்காரருக்கு அழைப்பு விடுத்தது. வேணு, 'King's Gambit'-ஐ தொடர்ந்து ஆட்டம் செல்லக் கூடிய பலவித சாத்தியங்களிலும் விற்பன்னன் என்பதால், தாடி அந்த 'அழைப்பை' ஏற்பாரா, நிராகரிப்பாரா என்று எங்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தாடி, PK4 X PKB5 என்று வேணுவின் சிப்பாயை வெட்டி வீழ்த்தி 'King's Gambit'க்கான அழைப்பை ஏற்றவுடன், 'தாடி கோணிக்குள் ஏதாவது செஸ் புத்தகம் வைத்திருக்கிறதோ' என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த வேணு பத்து நகர்த்தல்களுக்கு பிறகு, எதிராளியின் சரியான பதில் மூவ்களைக் கண்டவுடன், யோசித்து ஆட ஆரம்பித்தார். வேணுவும் தாடியும் எதிர்மறையாக 'castle' செய்தவுடன், செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. வேணு ஒரு யானையையும், ஒரு விதூஷகரையும், ஒரு சிப்பாயையும் இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை!

இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்கத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேணுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு செஸ் போர்டையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். குப்பை இளைஞரின் முகத்திலோ எந்தவொரு ரியாக்ஷனும் இல்லை. இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், வேணுவிடம் ராணி, ஒரு விதூஷகர், ஒரு குதிரை மற்றும் மூன்று சிப்பாய்களும், தாடியிடம், இரண்டு யானைகளும், இரண்டு குதிரைகளும், நான்கு சிப்பாய்களும் இருந்தன.

வேணு திடீரென்று, "யாரும் ஜெயிக்க முடியாது போலிருக்கு! டிரான்னு வச்சிக்கலாம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க, இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க" என்றார். பயங்கரக் கடுப்பான வேணு, ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். அப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. வேணுவின் தாக்குதலை திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, வேணுவிடமிருந்து மேலும் இரண்டு சிப்பாய்களை வீழ்த்தி விட்டார்.

ஒரு தேர்ந்த 'முடிவாட்ட' (END GAME) விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி, தாடிக்காரர் வேணுவின் ராஜாவை சந்திக்கு இழுத்தார். 'தொடர் செக்' (Perpetual Check) வழியிலாவது தப்பித்து டிரா செய்து விடலாம் என்ற நம்பிக்கையால் (தாடிக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை வேணு அவமானமாக எண்ணியிருக்கலாம் என்பது என் யூகம்!) ,வேணு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தாடிக்காரர் வேணுவை நோக்கி, "செக் மேட்! ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா. நன்றிங்க." என்று கூறி விட்டு தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். சரியாக மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாகத் திரண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!

நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சற்று நேரம் பிடித்தது. நான் தாடிக்காரர் சென்ற வழியில் ஓடி, அவரை இடைமறித்து, "ஒங்க பேர் என்னன்னு சொல்லலியே?" என்று வினவியதற்கு, அவர், "அரசன்னு தெரிஞ்சவங்க கூப்பிடுவாங்க, தம்பி" என்று சொல்லி விட்டு போய் விட்டார். அன்றிலிருந்து செஸ் விளையாட வேணு வரவில்லை! வேணுவின் மெல்லிய அகந்தையை, அந்த தாடிக்கார அறிவாளி பொட்டலம் கட்டி தன் கோணியில் எடுத்துச் சென்றதாகவே எனக்குத் தோன்றியது.

மெல்ல மெல்ல திண்ணை செஸ் ஆட்டங்களும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போயின. சார், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாகக் கேள்வி. வேணு பொறியியல் படிப்பு முடிந்து, IIM, பெங்களூரில் மேலாண்மை படிப்புக்குப் பிறகு, பணி நிமித்தம் மும்பை சென்று விட்டார். அதன் பின் தொடர்பு இல்லை. திருவல்லிக்கேணி வீட்டை காலி செய்து போன ரமணி, தேசிய அளவில் செஸ் விளையாடியதாக, பின்னாளில் அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். எனக்கும் செஸ்ஸ¤க்கும் ஆன தொடர்பு, ஆங்கில தினசரிகளில் இடம்பெறும் செஸ் புதிர்களை ஆராய்வதோடு நின்று போனது!
*******************************************

நாலைந்து வருடங்களுக்கு முன், மும்பையில் எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க மதுரைக்குச் சற்று தொலைவில் அமைந்துள்ள விஸ்வநாதபெரி என்ற கிராமத்துக்கு, சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். நண்பரின் தந்தையார் பண்னையார் என்பதும், அவருக்கு கிட்டத்தட்ட 200 ஏக்கர் விளைநிலம் இருப்பதும், அங்கு சென்ற பிறகே எங்களுக்கு தெரிய வந்தது. பெரிய பண்ணை வீட்டில் ராஜ உபசாரம், காலாற நடந்து நண்பரது நிலங்களையும், தோட்டங்களையும் சுற்றிப் பார்ப்பது, முதல் கள்ளு, முதல் டிராக்டர் பயணம், பிரிட்ஜ் ஆட்டம், ஒரு சர்க்கரை ஆலைக்கு விசிட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த சாஸ்தா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா என்று ஒரு மூன்று நாட்கள் அமர்க்களமாக கழிந்தன!

நண்பருக்கு விடை கொடுத்து, கிராமத்திலிருந்து மதுரை வந்து, சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், போக்குவரத்து நெரிசலால், பேருந்து நின்று விட்டது. எப்போதும் போல் நான் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்துக் கடை ஒன்றில் வெள்ளை வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து, தங்க பிரேம் மூக்குக்கண்ணாடி போட்டிருந்த நடுத்தர வயதுக்காரர் கடையில் வேலை செய்யும் சின்னப்பையனை பார்த்து, "பழைய புக்கா இருந்தாலும், என்ன புக்குனு பார்க்காம இப்படி கிழிக்கலாமா ? இந்த புக்ல என்ன இருக்குன்னு ஒனக்குத் தெரியுமா? பள்ளிக்கூட பசங்க யாருக்காச்சும் குடுக்கலாம்னு இருந்தேன்" என்று திட்டிக் கொண்டிருந்தார். புக்கின் அட்டையில் ராஜா படம் மாதிரி ஏதோ தெரிந்தது.

நெரிசல் நீங்கி பேருந்து சற்று முன்னோக்கிச் சென்றவுடன், ஞாபகத்தில் பொறி தட்டியது. கழுத்தைத் திருப்பிக் கடையை மறுபடியும் பார்த்தேன். "அரசன் வேஸ்ட் பேப்பர் மார்ட்" என்று எழுதியிருந்த சிறிய பலகை கடையில் தொங்க விடப்பட்டிருந்தது கண்ணில் பட்டது!
********************************

என்றென்றும் அன்புடன்
பாலா

இப்பதிவுக்கு அப்போது வந்த மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...
Nalla irunthuthu bala!

10:57 PM, January 24, 2006

Anonymous said...
Bala

It was very good. The rain symbolism reflected the moods of Venu and friends.

Anbudan
Sa.Thirumalai

2:11 AM, January 25, 2006

நிலா said...
nice one

3:43 AM, January 25, 2006

இளவஞ்சி said...
பாலா, அருமையான பதிவு!

சூழ்நிலையின் விவரிப்பும் ஆட்டத்தின் விமரிசனமும் அருமையாக பொருந்திப்போகிறது.

ஒரு செயலை அனுபவித்துச்செய்கிறவனுக்கு அடுத்தவரது அங்கீகாரங்கள் முக்கியமில்லாமல் போகிறது. ம்ம்ம்.. இந்த மண்டைக்கனம் மட்டும் இல்லாமல் இருந்தால்!!

12:30 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
சுரேஷ், நிலா
பாராட்டுக்களுக்கு நன்றி.

திருமலை,
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கமெண்ட் உங்களிடமிருந்து வந்தது குறித்து மகிழ்ச்சி, நன்றி !!!

இளவஞ்சி,
உங்களிடமிருந்து வந்த இந்த பாராட்டு மிகுந்த உற்சாகத்தையும் (ஊக்கத்தையும்) அளிக்கிறது, அடங்கொப்புரானே, சத்தியமாச் சொல்றேன் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

12:40 PM, January 25, 2006

தெருத்தொண்டன் said...
பாலா, அருமையான பதிவு!

permutations, combinations என்று தலையைப் பிய்க்கும் விஷயங்களைக் கூட சில சாதாரண மனிதர்கள் சாதாரணமாக செய்துவிடுவார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் அதுகுறித்து அவர்கள் அலட்டிக் கொள்வதும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு!
நன்றி..பாலா..

12:47 PM, January 25, 2006

கோபி(Gopi) said...
சூப்ப்பருங்க. மறுபடி அந்த 'அரசனை' சந்திச்சீங்களா?

12:49 PM, January 25, 2006

கைப்புள்ள said...
அருமையா விவரிச்சிருக்கீங்க பாலா. திருவல்லிக்கேணியை என்னாலும் என்றும் மறக்க முடியாது. பெரிய தெருவில நிறைய சுத்தி இருக்கேன். ஆனாலும் சாரதி செஸ் கிளப் பத்தி கேள்வி பட்டதில்லை. ஹிண்டு ஹை ஸ்கூலை "ரெட் பில்டிங்"னு தான் நாங்க எல்லாம் கூப்பிடுவோம். நீங்க சொல்லற மாதிரியே ஒரு தாடி காரர் எப்பவும் ரெட் பில்டிங் எதிர்ல் உட்காந்திருப்பார். பல தடவை பார்த்து இருக்கேன். நான் சொல்லற காலம் 1985-1998. ஆனா அவரு செஸ் எல்லாம் விளையாடுவாரா என்னனு தெரியாது..அவரோட பேரும் தெரியாது. எப்பவும் பேப்பரும் ஒரு ரீபில்லும் வெச்சு எதாச்சும் எழுதிட்டே இருப்பார். அப்ப அவர் இளைஞர் கிடையாது...ஒரு 50 வயசு இருக்கும்.

பழைய நினைவுகளை ஞாபகப் படுத்துச்சு உங்க பதிவு. அதோட வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதையும்.

2:44 PM, January 25, 2006

தேசிகன் said...
பாலா மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

3:08 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
தெருத்தொண்டன் சார்,
நீங்கள் சொல்வது 100% சரி. பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல !

கோபி,
திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ? ரொம்ப நாளா ஆளைக் காணோமே ???

அந்த "அரசனை" மீண்டும் சந்திக்கவில்லை !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

4:15 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
கைப்புள்ள அவர்களே,

//அருமையா விவரிச்சிருக்கீங்க பாலா. திருவல்லிக்கேணியை என்னாலும் என்றும் மறக்க முடியாது. பெரிய தெருவில நிறைய சுத்தி இருக்கேன்.
ஆனாலும் சாரதி செஸ் கிளப் பத்தி கேள்வி பட்டதில்லை.
//
முதற்கண் நன்றி. அந்த கிளப் 1980களில், அதாவது நீங்க சொல்ற காலத்துக்கு முன் !!!

//ஹிண்டு ஹை ஸ்கூலை "ரெட் பில்டிங்"னு தான் நாங்க எல்லாம் கூப்பிடுவோம். நீங்க சொல்லற மாதிரியே ஒரு தாடி காரர் எப்பவும் ரெட் பில்டிங்
எதிர்ல் உட்காந்திருப்பார். பல தடவை பார்த்து இருக்கேன். நான் சொல்லற காலம் 1985-1998. ஆனா அவரு செஸ் எல்லாம் விளையாடுவாரா
என்னனு தெரியாது..அவரோட பேரும் தெரியாது. எப்பவும் பேப்பரும் ஒரு ரீபில்லும் வெச்சு எதாச்சும் எழுதிட்டே இருப்பார். அப்ப அவர் இளைஞர் கிடையாது...ஒரு 50 வயசு இருக்கும்.
//
ரெட் பில்டிங் என்ற பெயரை நீங்கள் அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிடும் தாடிக்காரர் எனக்கும் பரிச்சயம் தான் :) தங்கள்
திருவல்லிக்கேணி வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்களேன் !!! இப்போது எங்கு இருக்கிறீர்கள் ? (விருப்பம் இருந்தால் கூறவும்).

தேசிகன்,
நன்றி. வசிஷ்டர் வாயால் "பிரம்மரிஷி" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

4:16 PM, January 25, 2006

J.S.ஞானசேகர் said...
நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்

5:02 PM, January 25, 2006

கைப்புள்ள said...
பாலா,
இருக்கற இடத்தை சொல்லறதுக்கு என்ன? இப்போ இருக்கறது இந்தூர், மத்திய பிரதேசம். அங்கே இப்ப திருவல்லிக்கேணி வாழ்க்கை தான்.(புரியலியா?...பாச்செலர் வாழ்க்கை...திருவல்லிக்கேணி பாச்செலர்களின் சொர்க்கம் இல்லியா?) நம்மூரைப் பத்தி எப்படிங்க சும்மா ஒரு பின்னூட்டத்துல சொல்ல முடியும். அதுக்குனு தனியா ஒரு ப்ளாக்கே போடலாம். பெரிய தெருவுல இப்ப ஞாபகத்துக்கு வர்றது...பிள்ளையார் கோயில், ஷண்முகம் நெய் கடை,வசந்தா புக் செண்டர்,CSI ஸ்கூல்,விஸ்வநாத ராவ் டெய்லர்,மாரா நர்சரி...எழுதிட்டே போகலாம். மலரும் நினைவுகள் சார்.

10:54 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
ஞானசேகர்,

mikka nanRi !!!

12:33 PM, January 26, 2006

ramachandranusha said...
நல்ல சிறுகதையைப் படித்த உணர்வு. "அரசன்" கேரக்டரை மறக்க முடியாம செஞ்சிட்டீங்க.

12:38 PM, January 26, 2006

enRenRum-anbudan.BALA said...
ஊக்கத்திற்கு நன்றி, உஷா !

//"அரசன்" கேரக்டரை மறக்க முடியாம செஞ்சிட்டீங்க.
//
பின்ன, 'அரசன்'னா சும்மாவா :-)

5:41 PM, January 27, 2006

வசந்தன்(Vasanthan) said...
நல்ல சுவாரசியமான பதிவு.

6:53 PM, January 27, 2006

enRenRum-anbudan.BALA said...
வசந்தன்,
'நல்ல சுவாரசியமான' பின்னூட்டத்திற்கு நன்றி :)

கோபிக்க மாட்டீர்கள் எண்டு நினைக்கிறேன் !!!!

12:21 PM, January 28, 2006

Anonymous said...
nandri bala.thiru allikkeni eppothume buddhisaalikalin iruppidam thaan. avarkal allikeniyaiyum Sri Parthasarathyaiyum marappathillai.nalla sol valam ungalukku.
aththuzhaai.

2:42 PM, January 28, 2006

பத்மா அர்விந்த் said...
முடிவை எதிர்பார்க்கவில்லை. அருமையாக இருந்தது. பீர்பாலின் கதை ஒன்றில் அரசனின் அகந்தையை போக்க அரசியின் தம்பி வந்து விளையாடுவது போலவும், விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதியும் சொல்லியிருந்த கதை நினைவுக்கு வந்தது. அதில் சம்பவங்கள் முற்றிலும் வேறு.

6:38 PM, January 28, 2006

enRenRum-anbudan.BALA said...
பத்மா,
ரொம்ப நாள் கழித்து வருகை தந்துள்ளீர்கள் !!! பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்
பாலா

11:10 PM, January 28, 2006

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test!

said...

this is excellent post. I went inside the incidents and the characters are still surrounding me !!!
---ரவி

பாச மலர் / Paasa Malar said...

வர்ணனை மிகவும் அற்புதமாயிருக்கிறது..பாத்திரங்கள் உயிர் பெற்றுக் கண் முன் நிற்கின்றனர்.

enRenRum-anbudan.BALA said...

செந்தழல் ரவி, பாச மலர்,

paaraattukku mikka nanRi !

ச.சங்கர் said...

அன்புள்ள பாலா

சம்பவங்கள் எப்படி சிறுகதையாக முடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு..வார்த்தைகளும் ,வருணனைகளும் அழகாக வந்து விழுந்திருக்கிறது
////அன்றிலிருந்து செஸ் விளையாட வேணு வரவில்லை! வேணுவின் மெல்லிய அகந்தையை, அந்த தாடிக்கார அறிவாளி பொட்டலம் கட்டி தன் கோணியில் எடுத்துச்
சென்றதாகவே எனக்குத் தோன்றியது.///

சூப்பர்

அப்புறம் மதுரையில் இருந்து பஸ்ஸில் திரும்ப வரும் போது நானும்தானெ பக்கத்தில் அமர்ந்திருந்தேன்...நீ ஒரு பழைய பேப்பர் கடை பார்த்ததாகவோ அல்லது அது பற்றி என்னிடம் சொன்னதாகவோ ஞாபகமில்லை :)ஆனாலும் ///பெரிய பண்ணை வீட்டில் ராஜ உபசாரம், காலாற நடந்து நண்பரது நிலங்களையும், தோட்டங்களையும் சுற்றிப் பார்ப்பது, முதல் கள்ளு, முதல் டிராக்டர் பயணம், பிரிட்ஜ் ஆட்டம், ஒரு சர்க்கரை ஆலைக்கு விசிட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த சாஸ்தா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா என்று ஒரு மூன்று நாட்கள் அமர்க்களமாக கழிந்தன!/// இதைப் பற்றி ஒரு நாவலே எழுதலாம்...இல்லையா?

நன்றி...இதை தட்டச்சும் போதே அந்த நாட்கள் மீண்டும் கண்முன் வந்து இதழில் புன்னகையாய் வழிகிறது

அன்புடன்...ச.சங்கர்

ilavanji said...

பாலா,

இன்னொரு தபா சொல்லீக்கறேன்.

கதை சொன்னவிதம் அருமை.

வடுவூர் குமார் said...

அருமையாக இருந்தது.
எப்படித்தான் இப்படி விவரிக்கமுடிகிறது உங்களால்?
உள் அமிழ்ந்துவிடேன்.

வடுவூர் குமார் said...

விட்டேன். ஒரு "ட்" விட்டுப்போய்விட்டது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலா

முன்பும் படித்து மகிழ்ந்தேன்!
இப்போதும் படித்து மகிழ்ந்தேன்!

குசும்பன் said...

மிகவும் அருமை பாலா! இன்றுதான் உங்கள் ஸ்டார் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன், நன்றாக எழுதி இருக்கீங்க!

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
பல வருடங்களுக்கு முன் நான் சொல்லாம விட்டது குறித்து இப்ப என்ன செய்ய முடியும் :)
அதான் இப்ப தெரிஞ்சு போச்சில்லையா ???

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

இளவஞ்சி,
அப்ப சொன்ன பதில் தான் இப்பவும்.
உங்களிடமிருந்து வரும் பாராட்டு எனக்கு பெரிய ஊக்கம், நண்பரே !

வடுவூர் குமார்,
வாங்க, இந்த "கதை" நான் நல்ல ஃபார்மல இருக்கும்போது எழுதினது ;-)

கண்ணபிரான்,
மீள் மகிழ்ச்சிக்கு நன்றி :)

குசும்பன்,
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

எ.அ.பாலா

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பாலா,

திருவல்லிக்கேணி வாசம் என்னிலும் உண்டு. கெல்லெட் உயர்நிலைப்பள்ளி மாணவனாக அங்குதான் வலம்வந்தேன். இந்துவிலும் நமது நட்புகள் உண்டு.

நல்ல பதிவு. திருவலிக்கேணி குறித்து இன்னொருநாள் பேசுவோம்.

அன்புடன்
ஆசாத்

அன்புடன்
ஆசாத்

enRenRum-anbudan.BALA said...

iniya AzAth,

pArAttukku mikka nanRi !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails